வாய் திறந்து பேசாத காரணமாக எந்த விஷயத்தையும் கூர்ந்து நோக்கும் அறிவு கைவரப் பெற்றது. சிறு சிறு விஷயங்கள் கூட அறிவில் புலப்படும். எல்லோருக்கும் ஒரு பார்வை ஆனால் மாறுபட்ட கோணத்தில் நான் உணர்வது என் வயது கூடக் கூட சேர்ந்து வளர்ந்தது.
எதிரில் இருப்பவர்களின் முட்டாள்தனம் சுலபமாக தென்படும். ஆனால் அதை விமர்சனம் செய்ய தைரியம் துணிவு இருந்தது இலலை. ஒரு விதத்தில் கும்கி படத்தின் ராமையா மாதிரி அனைத்தும் மைன்ட் வாய்ஸ் தான்
முப்பது வயது வந்து மூன்று பிள்ளைகள் பெற்ற பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்தது. அதன் காரணமாக குடும்பத்தில் அமைதி குலைந்தது. நான் சந்தித்த வரையில் தைரியமாக இருக்கும் பெண்ணை ஆண் விரும்புவதில்லை.
வாழ்வின் முதல் முப்பது ஆண்டுகள் அப்படி கழிந்தது என்றால் அடுத்து வந்த காலம் அப்படியே தலைகீழ் மாற்றங்களுடன். அதிர்ந்து கூட பேசாத நான் அதிர அதிர பேச ஆரம்பித்தேன். தபபு தவறுகளை கண்டும் காணாமல் வாழ்ந்த நான் கண் முன்னே நிகழும் எந்த சிறு விஷயங்களுக்கும் ரியாக்ட் பண்ண ஆரம்பித்தேன். மென்மை மறந்து போன கண்டிப்பான குரல் வந்து விட்டது. மேலும் ரொம்ப ரூல்ஸ் பேசும் ஒருத்தி ஆகிப் போனேன்.
எந்த சிறு தவறுகளையும் எவரிடமும் மன்னிக்க தோணவில்லை. எவரையும் நம்ப விரும்புவதில்லை. ஒழுங்கற்ற எதையும் விரும்ப தோணவில்லை. கணவர் ராமச்சந்திரன் ரொம்பவும் சிரமப் பட்டார், இந்த குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனைவியுடன் வாழ.
அவரது அன்பு காரணமாக கொஞ்சம் மாறினேன் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் அடிப்படை குணமான ஒழுங்கற்ற எதையும் நிராகரிப்பு செய்வதையும் ஒன்றிரண்டு முறைக்கு மேல் எவரையும் மன்னிப்பதை விட அவர்களை விலக்கி விடுதல் நலம் என்கிற குணம் இன்னமும் மனதின் அடியில் விழித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இவைகள் நிறைய பொருளாதார இழப்பை கொடுத்து இருக்கின்றன. அது குறித்து பெரிய வருத்தம் என்றும் இருந்தது இலலை. ஆயினும் தனிமை விரும்பியான எனக்கு உறவின் இழப்புகள் பெரிதாக தெரியவில்லை. இந்த புத்தாண்டில் சில நட்புகளை கட்டம் கட்டி விரட்டி விட்டேன். நட்பின் பெயர் சொல்லி தலையில் ஏறி அமர்வது மற்றும் உபயோகித்து கொள்வது என்பது சுத்தமாக சரிப்பட்டு வராததால் வெட்டி எறிந்து தான் இந்த புத்தாண்டு துவங்கி இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளில் இது மூன்றாவது விட்டொழிப்பு. ஒவ்வோர் முறையும் கொஞ்ச நாள் வலி இருக்கும். ஆனால் அதனால் கிடைக்கும் விடுபட்ட உணர்வு சொல்லி மாளாது.
புத்தாண்டு புத்துணர்வு...